நாட்டில் தென்மேற்கு பருவப் பெயர்ச்சி நிலை படிப்படியாக உருவாகி வருவதால் மழையுடனான காலநிலை தொடர்ந்தும் நீடிக்குமென வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

குறிப்பாக தென்மேற்குப் பகுதியில் காற்றுடன் கூடிய கடும் மழை பெய்வதற்கான சாத்தியக்கூறுகள் அதிகம் காணப்படுவதாக அத்திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.

வளிமண்டலவியல் திணைக்களம் இன்று (செவ்வாய்க்கிழமை) வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தொடர்பாக தெரிவித்துள்ளது.

மேல், தென், மத்திய, சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் மன்னார் மாவட்டத்திலும் அவ்வப்போது மழை பெய்யக்கூடிய சாத்தியம் காணப்படுவதாகவும் அத்திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

அநுராதபுர மாவட்டத்தில் கடும் மழை பெய்யக்கூடிய சாத்தியம் காணப்படுவதோடு, ஏனைய பிரதேசங்களில் பல இடங்களில் குறிப்பாக பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக்கூடிய சாத்தியம் காணப்படுவதாக அத்திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

சப்ரகமுவ, மத்திய, மேல் மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் 100 – 150 மி.மீ. அளவான பலத்த மழைவீழ்ச்சி பெய்யக்கூடிய சாத்தியம் காணப்படுவதாக குறிப்பிட்டுள்ளது.

கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களில் சில இடங்களில் 75 மி.மீ. அளவான ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.

நாடு முழுவதும் குறிப்பாக மத்திய மலைநாட்டைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் மேற்கு மற்றும் தெற்கு கரையோரப் பகுதிகளிலும் மணித்தியாலத்துக்கு 40-50 கிலோ மீற்றர் வரையான வேகத்தில் பலத்த காற்று வீசும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இதன் காரணமாக மீனவர்களை அவதானத்துடன் செயற்படுமாறு அத்திணைக்களம் எச்சரித்துள்ளது.

மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக்கொள்ளுமாறு பொதுமக்களுக்கு வளிமண்டலவியல் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.