ருமேனியாவிற்கான விஜயத்தை மேற்கொண்ட போப் பிரான்சிஸ் கத்தோலிக்கத் திருச்சபையின் சார்பாக ரோமா மக்களிடம் மன்னிப்புக் கோரியுள்ளார்.

ருமேனியாவில் அவர் பயணம் மேற்கொண்ட நிறைவுநாளில் நடைபெற்ற கூட்டம் ஒன்றில், ‘வரலாற்றில் பாகுபாட்டோடும், தவறாகவும், சந்தேகத்துடன் நடத்திய தருணங்களுக்காக’ மன்னிப்பு கேட்பதாக தெரிவித்துள்ளார்.

பல நூற்றாண்டுகளாக ரோமா மக்கள் ஐரோப்பாவில் சித்திரவதைகளை அனுபவித்து வந்துள்ளனர். யூத இனப்படுகொலையின் போது, லட்சக்கணக்கானோர் கொல்லப்பட்டதாக நம்பப்படுகிறது.

இப்போது ரோமா மக்கள் ஐரோப்பாவின் தெற்கு மற்றும் மத்திய பகுதிகளில் வசித்து வருகின்றனர். ருமேனியாவின் மொத்த சனத்தொகையில் இவர்கள் 10 சதவீதமாகவே உள்ளனர்.

தங்கள் மீது காட்டப்படும் பாகுபாடு காரணமாக தொழில் வாய்ப்புகள் கிடைக்காமல் வாழ்வாதாரத்திற்காக போராடி வருவதாக முறையிட்டுள்ள ரோமா மக்களில் பலர் வறுமைக் கோட்டின் கீழ் வாழ்ந்து வருகின்றனர்.

அவர்களின் முறைப்பாடுகளை கேட்டறிந்த போப், ருமேனியாவின் மத்தியில் அமைந்துள்ள பலாஜ் நகரில் நடைபெற்ற கூட்டத்தில் உரையாற்றிய போது;
“திருச்சபையின் சார்பாகவும், கடவுளின் சார்பாகவும் நான் மன்னிப்பு கேட்கிறேன். நான் உங்களின் மன்னிப்பை வேண்டுகிறேன்”

“மக்களை அலட்சியமாக நடத்துவது தவறான அபிப்ராயத்தை உருவாக்குகிறது. கோபத்தையும், மனவருத்தத்தையும் வளர்க்கிறது” என்று குறிப்பிட்டார்.

ருமேனியாவின் ஐரோப்பிய நாடாளுமன்ற உறுப்பினரான ரோமா இனத்தை சேர்ந்த தமியான் டிராக்ஹிசி பாப்பரசரின் மன்னிப்பு கோரல் தொடர்பாக கருத்து தெரிவிக்கையில், “எனக்கும், எனது மக்களுக்கும் இதுவொரு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தருணம். இந்த செய்தி எமது மக்களுக்கு எதிராக ஐரோப்பிய மக்களின் அணுகுமுறையை மாற்றும்” என்று தெரிவித்துள்ளார்.