சூடான் தலைநகர் கார்த்தோமில் உள்ள ராணுவ தலைமையகத்திற்கு முன்பாக மேற்கொள்ளப்பட்டு வந்த ஜனநாயக சார்பு ஆர்ப்பாட்டத்தின் மீது சூடான் பாதுகாப்பு படையினர் தாக்குதல் நடத்தியுள்ளனர்.

இந்த தாக்குதலில் சுடுகலன்கள் பயன்படுத்தப்பட்டமையினால் குறைந்தது 8 பேர் வரை உயிரிழந்ததாக மருத்துவ தரப்பினர் தெரிவித்துள்ளனர்.

சூடான் தற்போது ஒரு இடைக்கால இராணுவ கவுன்சில் ஆட்சியைக் கொண்டுள்ளது. முன்னாள் ஜனாதிபதி ஒமர் அல்-பஷீரின் ஆட்சி கடந்த ஏப்ரல் மாதம் கவிழ்க்கப்பட்டதை தொடர்ந்து இடைக்கால இராணுவ அரசு தனது அதிகாரத்தை நிலைநாட்டியது.

எவ்வாறாயினும் பிரதான போராட்டங்களை படையினரைக் கொண்டு அடக்கியதாக வௌியான செய்திகளை இராணுவ கவுன்சில் மறுத்திருந்தது.

இந்தநிலையில், இராணுவ தலைமையகத்திற்கு அருகில் உள்ள பகுதிகளில் பாதுகாப்பின் நிமித்தமே இராணுவத்தினர் நிறுத்தப்பட்டிருந்ததாகவும், யாரையும் இலக்கு வைத்து தாக்கவில்லை எனவும், இடைக்கால இராணுவ கவுன்சில் பேச்சாளர் லெப்டினன் ஜெனரல் ஷாம்ஸ் அல்-டின் கப்பாஸி தெரிவித்துள்ளார்.

மாறாக குடிமக்களின் பாதுகாப்பு கருதி படையினர் தொடர்ந்தும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருவார்கள் என்றும் அவர் குறிப்பிட்டார்.

எவ்வாறாயினும், இராணுவ ஆட்சி நீக்கப்பட்டு சிவில் அரசாங்கம் ஒன்று நாட்டை பொறுப்பேற்க வேண்டும் என்று போராட்டக்காரர்கள் தொடர்ந்தும் வலியுறுத்தி வருகின்றனர்.