தென்னிந்திய நடிகர் சங்கத்துக்கு வருகிற 23-ந் தேதி தேர்தல் நடக்கிறது. இந்த தேர்தலுக்கான வேட்பு மனுதாக்கல் 7-ந் தேதி தொடங்கியது. மனுதாக்கல் செய்ய 10-ந் தேதி கடைசி நாள். மனுக்களை 14-ந் தேதி வாபஸ் பெற்றுக்கொள்ளலாம். இறுதி வேட்பாளர் பட்டியல் அன்று மாலை வெளியாகிறது.

இந்த தேர்தலில் நாசர் தலைவர் பதவிக்கும், விஷால் பொதுச்செயலாளர் பதவிக்கும் மீண்டும் போட்டியிடுகிறார்கள். கார்த்தி பொருளாளர் பதவிக்கு நிற்கிறார்.
இந்நிலையில்  நடிகர் நாசரை எதிர்த்து தலைவர் பதவிக்கு பாக்யராஜ் போட்டியிடுகிறார்.  விஷாலை எதிர்த்து பொதுச் செயலாளர் பதவிக்கு ஐசரி கணேஷ் களம் காண்கிறார். 
துணைத் தலைவர்கள் பதவிக்கு குட்டி பத்மினி, நடிகர் உதயா ஆகியோர் போட்டியிடுகிறார்கள். இந்த நிலையில் பொருளாளர் பதவிக்கு நடிகர் கார்த்தியை எதிர்த்து நடிகர் ஜெயம் ரவி போட்டியிடப்போவதாக தகவல் வெளியாகி உள்ளது.
நடிகர் சங்க தேர்தலில் பாக்யராஜ் களம் காண்பதால் நடிகர் சங்க தேர்தல் சூடு பிடித்துள்ளது.
நடிகர் சங்கத்தின் தேர்தல் நெருங்கும் வேளையில் கடந்த முறை நடைபெற்ற நடிகர் சங்க தேர்தலில் பெரும் போராட்டத்திற்கு பின் விஷால் தலைமையிலான பாண்டவர் அணி வெற்றி பெற்றதற்கு மிக முக்கியமான நபராக கருதப்படும் நபர் அயூப். இவர் தற்போது விஷால் அணியில் இருந்து விலகி எதிரணி சார்பில் செயற்குழு உறுப்பினர் பதவிக்கு போட்டியிடுகிறார்.
நடிகர் சங்க தேர்தலில் போட்டியிடுவது குறித்து நடிகர் பாக்யராஜ் தலைமையில் ஆலோசனை கூட்டம்  நடைபெற்றது. இந்த ஆலோசனைக் கூட்டமானது தேர்தலில் யார் யார் எந்த பதவிக்கு போட்டியிடுவது, தேர்தல் வாக்குறுதிகள் உள்ளிட்ட முக்கிய முடிவுகளை எடுக்க ஆலோசனை நடத்தப்பட்டது.