அவிநாசி அருகே குடும்ப பிரச்சனையின் காரணமாக பெற்ற தந்தையே மகனை கத்தியால் வெட்டி கொல்ல முயன்ற சம்பவம் அரங்கேறியுள்ளது. 
அவிநாசியை அடுத்து எஸ்.மேட்டுப்பாளையம் பகுதியை சேர்ந்தவர் ராதாகிருஷ்ணன் (21). இவர் திருப்பூரில் வங்கி முகமை அலுவலக ஊழியராக பணியாற்றி வருகிறார். இவரது தாயார் கிருஷ்ணவேணி, அவிநாசியில் பனியன் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். 

இவரது தந்தை செல்வம் (46) கடந்த ஆறு ஆண்டுகளுக்கு முன் இவர்களை விட்டு பிறிந்து சென்று கோவையில் வேறு ஒரு பெண்ணுடன் வாழ்ந்து வருகிறார். இதனால் அவ்வபோது கோபம் வரும்போதெல்லாம் ராதாகிருஷ்ணன் தனது தந்தைக்கு போன் செய்து உன்னால் தான் நானும் அம்மாவும் கஷ்டப்படுகிறோம் என்று சொல்லி சண்டை போட்டு வந்துள்ளார். 

இதனால் ஆத்திரமடைந்த செல்வம் நேற்று எஸ்.மேட்டுப்பாளையத்தில் உள்ள தனது மகன் வீட்டிற்கு வந்துள்ளார். வீட்டு கதவு சாத்தப்பட்டிருந்த நிலையில் செல்வம் கதவை தட்டியுள்ளார். வீட்டில் தனியாக இருந்த ராதாகிருஷ்ணன் கதவை திறந்தபோது, செல்வம் தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து பெற்ற மகன் என்றும் பாராமல் ஈவு இரக்கமின்றி வயிறு, தலை மற்றும் கழுத்துப் பகுதிகளில் சரமாதிரி குத்தினார். இதையடுத்து ராதாகிருஷ்ணனின் அலறல் சத்தம் கேட்டு, அக்கம் பக்கத்தினர் வருவதை கண்ட செல்வம் கத்தியுடன் தப்பி சென்றார். 

இதில் ரத்தவெள்ளத்தில் படுகாயமடைந்த ராதாகிருஷ்ணனை அப்பகுதி மக்கள் உடனடியாக மீட்டு, அவிநாசி அரசு மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றனர். பின்னர் அங்கு முதலுதவி அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். 

இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார், தலைமறைவான செல்வத்தை தேடி வருகின்றனர். பெற்ற மகனை கத்தியால் குத்தி தந்தையே கொடூரமாக கொலை செய்ய முயற்சி செய்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.