கடந்த 2 நாட்களாக சமூக வலைத்தளங்களில் டிரெண்டிங்கில் இருப்பவர் வடிவேலுவின் நேசமணி.
திரை உலகை தாண்டி உலகளவில் மீம்ஸ் மன்னராக வலம் வந்து கொண்டிருக்கின்றார் வடிவேலு.பல்வேறு நகைச்சுவை கதாபாத்திரங்களால் மக்களின் மனதை கவர்ந்த வடிவேலு, தற்போது நடிக்காவிட்டாலும், அவர் மீம்ஸ் மூலம் மக்களுடன் கலந்துள்ளார். 

வடிவேலு பேட்டி:
டிரெண்ட் குறித்து வடிவேலு பேசியுள்ளதாவது, “எல்லா புகழும் இறைவனுக்கே என சொல்வர்கள். அது போல நேசமணிக்கு கிடைத்த எல்லா புகழும் இயக்குனர் சித்திக்கையே சேரும். நேசமணி கதாபாத்திரத்தை உருவாக்கியதே அவர் தான்.

படப்பிடிப்பில் இருக்கும் போது எனக்கு காமெடியில் தோன்றும் சின்ன சின்ன ஐடியாக்களை சித்திக்கிடம் சொல்வேன். ஒரு முறை கூட அவர் மறுப்பு சொன்னதே இல்லை. அப்படி ஒரு பெருந்தன்மை அவருக்கு.

அதே போல் காமெடிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கேஎஸ் ரவிக்குமார், சுந்தர் சி, சுராஜ், வி சேகர் ஆகியோரும் திறமைசாளிகள்.” என தெரிவித்துள்ளார்.

தயாரிப்பாளர் சங்கம் மீது புகார்:
நான் வாழக்கூடாது, என்னை சாகடிக்க வேண்டும் என தயாரிப்பாளர் சங்கம் முடிவெடுத்து விட்டது. நான் அதைப்பற்றி கவலைப்படவில்லை.

எனக்கு கிடைத்த இந்த சினிமா இடைவெளியில் என் மகன், மகளுக்கு திருமணம் செய்து வைக்கும் கடமையை முடித்து விட்டேன். அவர்களின் வாழ்க்கையை செட்டில் செய்துவிட்டேன்.

நான் இனி சினிமாவில் நடிப்பது கடவுளின் கையில் தான் இருக்கிறது.
இம்சை அரசன் 2வது பாகத்தில் 3 வித கதாபாத்திரத்தில் நடிக்கிறேன். என் பங்களிப்பு இல்லாமல் படம் முடியாது. மொத்த பாரமும் என் மீது தான் உள்ளது.

மற்ற படங்களைப் போல் சுதந்திரமாக என்னை நடிக்க விடுவதில்லை. நான் சொன்னது செய்தால் போதும் என டைரக்டர் கூறுகிறார். 
என் இஷ்டத்துக்கு நடிக்க விட்டதால் தான் நேசமணி போன்ற கதாபாத்திரம் ட்ரெண்டிங் ஆனது. ஆனால் அதை இயக்குனர் புரிந்து கொள்ளவில்லை. நான் வீட்டிலேயே இருக்க வேண்டும் என ஆசைப்படுகின்றனர்.

மோடி தான் தெரியும்:
நேசமணி டிரெண்டிங் குறித்து கேட்டதற்கு எனக்கு மோடி பதவி ஏற்கும் செய்தி தான் தெரியும் மற்றபடி நேசமணி டிரெண்டிங்கில் இருப்பது இன்னும் பார்க்கவில்லை என கூலாக வடிவேலு கூறியுள்ளார்.